ஊத்துக்கோட்டை, ஆக. 18: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலத்தில் சுருட்டப்பள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. சிவன் கோயில்களில் எங்குமே லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமான் இந்த கோயிலில் மனித வடிவில் பள்ளிகொண்ட நிலையில் இருப்பது இங்கு தான். இங்கு சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலையிலேயே விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா, தம்பதி சமேத தட்சினாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, பள்ளி கொண்டீஸ்வரர், சர்வ மங்களா ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரருக்கு வெள்ளி கவசம் அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
பின்னர் மாலையில் வால்மீகிஸ்வரர் எதிரே உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல், வில்வ இலை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிவன் பார்வதி ஊர்வலமாக கோயிலை வலம் வந்தனர். இப்பூஜைகளை தலைமை குருக்கள் கார்த்திகேசன் சிவாச்சாரியார் செய்தார். இப்பிரதோஷ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாதவரம், கோயம்பேடு, பொன்னேரி, பகுதிகளிலிருந்து சுருட்டபள்ளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதே போல் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வடதில்லை ஆகிய கோயில்களில் பிரதோஷம் நடைபெற்றது.
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலான மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
மாலை கோயில் வளாகத்தில் உற்சவர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். 300க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பெண்களுக்கு புடவை, வளையல், அம்மன் படம், மஞ்சள், குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் க.ரமணி, அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, மோகனன், உஷாரவி, நாகன் ஆகியோர் செய்திருந்தனர்.