ஊத்துக்கோட்டை, நவ. 10: ஊத்துக்கோட்டை அருகே, மேய்க்கால் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வனத்துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர். ஊத்துக்கோட்டை அருகே, சீத்தஞ்சேரி வனத்துறை அதிகாரிகள் பால விக்னேஷ் மற்றும் சக்திவேல் ஆகியோர் தலைமையில், வனத்துறையில் உள்ள மேய்க்கால் நிலங்களை அளவீடு செய்ய நேற்று காலை ராமநாதபுரம் கிராமத்திற்கு வந்திருந்தனர். இதனையறிந்த ராமநாதபுரம் மற்றும் அம்மம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர்கள் மாரியம்மாள் வடிவேல், சரசு பூபாலன் மற்றும் கிராம மக்கள் அங்கு வந்தனர். அப்போது, அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ராமநாதபுரம் கிராமத்திற்கு 87 ஏக்கர் நிலமும், அம்மம்பாக்கம் கிராமத்திற்கு 57 ஏக்கர் நிலம் என மொத்தம் 144 ஏக்கர் நிலம் இந்த கிராமத்திற்கு சொந்தமான மேய்க்கால் நிலம் ஆகும். அதை நீங்கள் அளவீடு செய்யக்கூடாது என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதைக்கேட்ட வனத்துறையினர், இது எங்களுக்கு சொந்தமான இடம். இதை அளவீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது என கூறினர். அப்போது, கிராம மக்கள் வனத்துறையினரிடம் இந்த இடத்தை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வருடம் அக்டோபர் 20ம் தேதியன்று தீர்ப்பு கூறியுள்ளது. மேலும், இது சம்மந்தமாக, ஊத்துக்கோட்டை தாசில்தாரிடம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி இந்த மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை தாசில்தார் எங்களுக்கு நிலத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை. மேலும், வருவாய் துறையினர் எங்களுக்கு அளவீடு செய்து கொடுக்கும் வரை நீங்களும் அளவீடு செய்யக்கூடாது என வனத்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுமட்டுமல்லாமல், இந்த மேய்க்கால் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதை நாங்கள் ஊராட்சி சார்பில் அமைக்க உள்ளோம் என கிராமத்தினர் வனத்துறையினரிடம் கூறினர். இதைக்கேட்ட வனத்துறையினர், இந்த இடம் மேய்க்கால் நிலமாக இருந்தாலும் வனத்துறைக்கு சொந்தமான இடம். இங்கு நீங்கள் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொள்ளலாம். ஆனால், கட்டிடங்கள் கட்டக்கூடாது என்றனர். இதனைதொடர்ந்து, கலெக்டர் வந்து முடிவு கூறும் வரை நிலத்தை நீங்கள் அளவீடு செய்யக்கூடாது என கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அளவீடு செய்யாமல் வனத்துறையினர் திரும்பிச்சென்றனர்.