ஊத்துக்கோட்டை, ஜூலை 3: ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் ஊராட்சி குருபுரம் கிராமத்தில் மணல் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட தொகுப்பு வீடு கட்டும் பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் ஊராட்சி, வேம்பேடு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, அதே ஊராட்சியைச் சேர்ந்த குருபுரம் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கடந்த வருடம் 22 குடும்பங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ₹5 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, இப்பணிகளுக்கு அடித்தளம் மட்டுமே போடப்பட்டு, வீடுகள் கட்டும் பணிகள் பாதியிலேயே நிற்கிறது. இந்த, பணிகளை விரைந்து முடித்து தரவேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, பழங்குடியின மக்கள் கூறுகையில், கடந்த வருடம் குருபுரம் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டுவதற்காக பணிகள் தொடங்கினோம். ஆனால், வீடுகள் கட்ட அடித்தளம் போடுவதற்கு சவுடு மண் தேவவைப்படுவதால், சவுடு மண் எடுப்பதற்கு ஊத்துக்கோட்டை தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை இம்மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், எங்கள் வீடுகள் கட்டும் பணியானது பாதியிலேயே நிற்கிறது. எனவே, சவுடு மண் இன்றி பாதியில் கிடப்பில் போடப்பட்ட வீடு கட்டும் பணிகளை, மீண்டும் தொடங்குவதற்கு கலெக்டர் உதவிட வேண்டும் என கூறினர்.