ஊத்துக்கோட்டை, மே 29: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ – மாணவிகளுக்கான இந்தாண்டுக்கான பாட புத்தகங்கள் வந்துள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை 650 மாணவர்களும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 750 மாணவிகளும் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிகளில் ஊத்துக்கோட்டை, தாராட்சி, தொம்பரம்பேடு, பாலவாக்கம், லச்சிவாக்கம், பேரண்டூர், செஞ்சியகரம், பால்ரெட்டி கண்டிகை மற்றும் போந்தவாக்கம், அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வடதில்லை ஆகிய பகுதிகளில் இருந்து 1,400 மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் தேர்வு எழுதினர்.
இதில் ஆண்கள் பள்ளியில் 85 சதவீத மாணவர்களும், பெண்கள் பள்ளியில் 93 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். தேர்வு விடுமுறைக்கு பிறகு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பொன்னேரி கல்வி மாவட்டம் மூலம் ஊத்துக்கோட்டை ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளுக்கு, இந்த ஆண்டுக்கான பாட புத்தகங்களும், நோட்டுகளும் நேற்று வந்து இறங்கின. இப்பாட புத்தகங்கள் பள்ளிகள் திறந்ததும் மாணவ – மாணவிகளுக்கு வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.