மதுரை, ஜூலை 1: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பணிகளை புறக்கணித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாநகராட்சி தொழிலாளர் சங்கம் – சிஐடியு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். எல்பிஎப் தங்கவேல் துவக்கி வைத்தார். கவுன்சிலர் குமரவேல், விசிக – எல்எல்எப் மாநில துணைத்தலைவர் முத்து, எல்பிஎப் தலைவர் சவுந்தர்ராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் கருப்பசாமி, செயல்தலைவர் ரவி, எல்எல்எப் நிர்வாகிகள் சோனை, பேச்சியம்மாள், சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரசாணையின்படி அறிவித்த ரூ.754 ஊதியத்தை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் ஒரு மாத ஊதியமான ரூ.15 ஆயிரத்து 500ஐ போனசாக வழங்கிட வேண்டும். ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யும் தனியார் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். நிரந்தர காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கனரக ஓட்டுநர்களுக்கு தினச் சம்பளம் ரூ.900 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இந்த முற்றுகை போராட்டம், மாலை வரை நீடித்த நிலையில், இதில் பங்கேற்றோருக்கு அங்கேயே உணவு பரிமாறப்பட்டது.