திட்டக்குடி, அக். 27: திட்டக்குடி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மூன்று வார சம்பளம் வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.திட்டக்குடியை அடுத்த கோடங்குடி ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் வாரந்தோறும் ஒரு வார்டிலுள்ள பொதுமக்களுக்கு வேலையை ஊராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் 3வது வார்டில் வசிக்கும் சுமார் 150க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு முறையாக வேலை வழங்கவில்லை எனவும், மூன்று வாரமாக அவர்கள் செய்த வேலைக்கான ஊதிய தொகை வழங்காததை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவர், கிளார்க் உள்ளிட்ட எந்த அதிகாரியும் வராததால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.