ஊட்டி, நவ. 14: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கிய 2 மாதங்கள் பெய்யும். பொதுவாக, வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் அதிகளவு பெய்யும். மற்ற பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்த காணப்படும். ஊட்டியில் நவம்பர் மாதம் துவங்கினாலே பனிப்பொழிவு துவங்கிவிடும். நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் வரை நீர் பனி காணப்படும்.
அதன் பின் உரை பனி விழும். கடந்த மாதம் ஊட்டியில் மழை பெய்த நிலையில் பணியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக, நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்த நிலையில் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர் பனி கொட்டி தீர்த்தது. இதனால், புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், பூங்காக்களில் அதிகாலை நேரங்களில் செடிகளில் வெள்ளி இழை போன்று பனித்துளிகள் காணப்பட்டன. இதனை உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். அதேசமயம் நீர் பனியின் காரணமாக குளிரும் அதிகரித்தது.
அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலைக் காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் குளிரால் பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளும் குளிரால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மேகமூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், குந்தா போன்ற பகுதிகளில் காலை முதலே கடுமையாக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்படுகிறது. நீலகிரியில் அடிக்கடி கால நிலையில் மாற்றம் ஏற்படுவதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் பாதிக்கும் அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் நல்ல வெயில் நிலவியதுடன் மாலை மற்றும் இரவு நேரங்களில் நீர் பனி கொட்டியது.
இந்நிலையில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நேற்று காலை முதலே கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. பனியுடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. எதிரே உள்ள பொருட்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனி மூட்டம் மற்றும் சாரல் மழையால் கடும் குளிர் நிலவியது. பனி மூட்டம் காரணமாக மலைப்பாதையில் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதால் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்த படி குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. குறிப்பாக மஞ்சூர் கிண்ணக்கொரை, மற்றும் கெத்தை சாலைகளில் பல மணி நேரம் நீடித்த பனி மூட்டத்தால் நேற்று இவ்வழியாக வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டுனர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.