ஊட்டி: ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. குளிரால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை ஒரு மாதம் நீடித்தது. பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாத நிலையில் கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சில சமயங்களில் கன மழையும் பெய்கிறது. இதனால், மலைப்பாங்கான பகுதிகளில் மலை காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்றும் ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் சாரல் மழை பெய்தது. மழை காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிரின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டது. குளிர் அதிகமாக காணப்பட்டதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குகள்ளாகினர், மேலும், வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர். நாள் தோறும் மாறுப்பட்ட காலநிலை நிலவும் நிலையில், பலரும் சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.