ஊட்டி, ஜூன் 19: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் அரசு பஸ்கள் செல்ல முடியாத வழித்தடங்களில் தனியார் பங்களிப்புடன் மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் இயங்கி வருகிறது. எல்லநள்ளி, தலைக்குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
கை காட்டும் இடங்களில் எல்லாம் பயணிகளை நிறுத்தி ஏற்றி செல்வதால் பொதுமக்கள் அதிகளவு மினிபஸ்களில் பயணிக்கின்றனர். ஆனால் மினிபஸ்களில் அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்புவது, முன்பு செல்லும் வாகனங்களை அச்சுறுத்தும் நோக்கில் வேகமாக முன்பு செல்லும் வாகனத்திற்கு அருகில் வந்து ஒலி எழுப்புவது, சீருடையின்றி நடத்துனர் பணி செய்வது, போன்ற செயல்களில் பெரும்பாலான மினிபஸ் ஓட்டுநர்கள் ஈடுபடுகின்றனர்.
இவற்றை பஸ் உரிமையாளர்களும் இதனை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. ஊட்டி எச்பிஎப்., பகுதியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிதாக திறக்கப்பட்ட நிலையில், தற்போது ஊட்டி -தலைக்குந்தா வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் சற்று கூட்டம் காணப்படுகிறது. இதனால் பயணிகளை ஏற்றி செல்வதற்காக ஊட்டி – தலைக்குந்தா இடையே மினிபஸ்கள் போட்டி போட்டு கொண்டு இயக்கப்படுகின்றன. முன்னால் செல்ல அதிவேகமாக முந்திச்செல்ல முற்படுவது, பின்னால் வரும் பஸ் உள்ளி்டட வாகனங்கள் முந்தி செல்லாதவாறு நடுசாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மினி பஸ்களால் பெரிய அளவிலான விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அடிக்கடி உரிய ஆய்வுகள் ேமற்கொண்டு விதி மீறும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.