ஊட்டி,ஜூன்7: ஊட்டி – கூடலூர் சாலையில் பல இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சாலையோர இரும்பு தடுப்புகள் சேதமடைந்து காட்சியளிக்கின்றன. நீலகிரி மாவட்டம்,ஊட்டியில் இருந்து கூடலூர் பகுதி சுமார் 50 கிமீ., தொலைவில் அமைந்துள்ளது.கூடலூர் பகுதிக்கு செல்ல கூடிய சாலையானது தலைக்குந்தா பகுதியில் இருந்து பெரும்பாலும் வனத்தின் ஊடே செல்கிறது. சில இடங்களில் அபாயகரமான வளைவுகள், குறுகிய மற்றும் செங்குத்தான சாலையாக உள்ளது. இதனால் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்க கூடிய வாகனங்கள் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விடாமல் இருக்க பல இடங்களிலும் சாலையோரத்தில் தேசிய நெடுங்சாலைத்துறை சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனிடையே பருவமழை காரணமாக இச்சாலையின் குறுக்கே விழும் மரங்கள் இந்த இரும்பு தடுப்புகள் மீதும் விழுகின்றன.
இதனால் தலைக்குந்தா முதல் பைக்காரா வரையிலும் இரும்பு தடுப்புகள் சேதமடைந்து விழுந்து கிடக்கின்றன. இதனால் சாலையில் வேகமாக செல்ல கூடிய வாகனங்கள் விபத்தில் சிக்க கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே கூடலூர் சாலையில் சேதமடைந்த இரும்பு தடுப்புகளை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.