ஊட்டி, செப்.1: டெல்லி ஜாகிர் நகர் பகுதியை சேர்ந்தவர் பைசன் அகமது (26). இவருடைய மனைவி சகானா (26). இவர்களுக்கு மகன் அகமது அலி (6). இப்ராஹிம் என்ற 7 மாத குழந்தையும் உள்ளது. இவர்களும் பைசன் அகமதுவின் உறவினரான தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜர்னலிஸ்ட் காலனியை சேர்ந்த முகமது அலி (26), இவருடைய மனைவி சனா (28) உள்ளிட்டோர் குடும்பமாக ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி முகமது அலியின் காரில் அனைவரும் ஊட்டிக்கு வந்தனர். ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா தளங்களை கண்டு ரசித்த அவர்கள், இறுதியாக நேற்று மசினகுடி சாலை வழியாக மைசூர் சென்று அதன்பின்னர் ஐதராபாத் செல்ல முடிவு செய்திருந்தனர். தலைக்குந்தா சந்திப்பில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளி மாநில வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால் ஊட்டியில் இருந்து புதுமந்து சாலை, காரபிள்ளு, உல்லத்தி வழியாக சென்று கல்லட்டி சாலையை அடைய திட்டமிட்டனர். அதன்படி காரில் புறப்பட்டனர்.
காரை பைசன் அகமது ஓட்டினார்.உல்லத்தி பகுதியில் ெசன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 பேரையும் அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் அகமது அலி சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இப்ராகிம் தவிர மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.