ஊட்டி,ஜூலை5: ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ராமலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், ‘‘முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியின் நடைமுறையினை புரிந்து கொண்டு சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்’’ என்றார்.
குன்னூர் இந்திய வங்கியின் மேலாளர் சங்கர், கல்லூரி என்சிசி படையின் பொறுப்பாளர் கேப்டன் விஜய் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வுபெற்ற ஆசிரியர் கே.ஜே.ராஜு பேசியதாவது: ஒரு மாணவருடைய கற்கும் திறனில் 75 சதவீதம் கற்றல் நிகழ்ச்சி கல்லூரி பருவத்தில் தான் நடைபெறுகிறது.
மனித மூளை என்பது ஒரு அற்புதமான சூப்பர் கம்ப்யூட்டர். ஒரு கோடி செல்கள் பத்தாயிரம் கோடி நியூரான்கள் அமைப்பை கொண்ட மனித மூளையின் மாதிரி தான் இன்றைய ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையாகும்.
நாம் நமது மூளையின் திறனில் இரண்டு முதல் மூன்று சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறோம் என ஒரு ஆய்வு கூறுகிறது.