ஊட்டி, செப்.2: நீலகிரி மாவட்டத்தில் 2வது சீசன் துவங்கியுள்ள நிலையில், விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசன் காலமாகும். இந்த சமயத்தில் ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க வடமாநிலங்களை சேர்ந்த புதுமண தம்பதிகள் வருவார்கள்.
இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான 2வது சீசன் துவங்கியுள்ளது. கடந்த ஜூலை மாத இறுதியில் கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலச்சரிவு சம்பவத்தால் கேரள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கடந்த நிலையில் தற்போது கேரள சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர். குறிப்பாக வார நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகை அதிகமாக உள்ளது.
இதனால் 2வது சீசன் மெல்ல மெல்ல களைக்கட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்பட்டது. அதற்கேற்றார் போல் இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா தளங்களை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டினர். பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியிருந்தன.