ஊட்டி : ஊட்டி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது மினி பஸ் தோட்டத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஊட்டி அருகேயுள்ள தொரைஹட்டி கிராமத்தில் ஒருவர் இறந்துள்ளார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக காரபிள்ளு கிராமத்தில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் ஒரு மினி பஸ்சை வாடகைக்கு எடுத்து மல்லிக்கொரை வழியாக சென்றுள்ளனர்.அப்போது, அவர்கள் சென்ற சாலை மிகவும் குறுகலாக இருந்துள்ளது. மினி பஸ்சை அதிகரட்டி பகுதியை சேர்ந்த நரேன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிரே ஒரு வாகனம் வந்துள்ளது. அதற்கு மினி பஸ் இடம் கொடுக்க முயற்சித்த போது, எதிர் பாரத விதமாக அருகில் இருந்த தோட்டத்திற்குள் மினி பஸ் கவிழ்ந்துள்ளது.பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர். இதில், காரபிள்ளு பகுதியை சேர்ந்த பாஞ்சாலி (46), விமலா (36), கண்ணாம்மாள் (60) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது தவிர இந்த மினி பஸ்சில் பயணித்த 20க்கும் மேற்பட்டோருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை, அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 வாகனம் மூலமும், தனியார் வாகனங்கள் மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தேனாடுகம்பபை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஊட்டி கலெக்டர் அம்ரித், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில் ஊட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பாஞ்சாலி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாஞ்சாலி பரிதாபமாக உயிரிழந்தார்….