ஊட்டி,ஆக.5:ஊட்டி மற்றும் கிராமப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாறுபட்ட காலநிலை நிலவுவதால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கும். ஆனால், இம்முறை ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை துவங்காத நிலையில் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகினர்.அதேசமயம், சில தினங்கள் கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்கிறது. சில நாட்கள் வெயில் அடிக்கிறது. தொடர்ந்து இரு மாதங்களாக நீலகிரியில் பெரும்பாலான பகுதிகளில் மாறுபட்ட காலநிலையே நிலவுகிறது.
குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள்தோறும் மாறுபட்ட காநிலை நிலவுகிறது. காலையில் நிலவும் காலநிலை, மாலையில் இருப்பதில்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாறுப்பட்ட காலநிலையால் காய்கறி பயிர்கள் மற்றும் தேயிலை செடிகள் போன்றவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் மலை காய்கறிகள் மற்றும் தேயிலைக்கும் நோய் தாக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தற்போது தேயிலை மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்காமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.