ஊட்டி, மே 18: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு காவல் துறையுடன் உதவியுடன் சீல் வைக்கப்பட்டு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில்: இனிவரும் காலங்களில் மாவட்டம் முழுவதும் தொடர் ஆய்வு செய்யப்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ, உணவகங்கள் மற்றும் கடைகளில் கெட்டுப்போன பழைய உணவுகள், காலாவதியான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும்.
உணவு பாதுகாப்பு சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி பறிமுதல் மற்றும் வியாபார நிறுத்தம் அல்லது நியமன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும். நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை வாட்ஸ் அப் புகார் எண் அல்லது உணவு பாதுகாப்புத் துறை TN Food Safety என்ற புகார் செயலி, http://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும், இவ்வாறு கூறினார்.