ஊட்டி, மே 24: தொடர் மழையின் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள டேலியா மலர்கள் அழுகி உதிர துவங்கியுள்ளன. ஊட்டியில் ஆண்டு தோறும் கோடை காலமான மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக பூங்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக்குலுங்கும். இந்நிலையில், இம்முறை மலர் கண்காட்சிக்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் டேலியா, மேரிகோல்டு, சால்வியா, பேன்சி, கேளுண்டுல்லா, லில்லியம், ஆர்கிட், பெட்டூனியம் உட்பட பல்வேறு வகையான மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூத்துக்காணப்படுகின்றன. இந்நிலையில், ஊட்டியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், பூங்காவில் உள்ள பெரும்பாலான மலர் செடிகள் மழையில் பாதிக்காத போதிலும், டேலியா மலர்கள் மட்டும் பாதிக்கப்பட்டு அழுகி உதிரத்துவங்கியுள்ளன. அதே சமயம் மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் இன்னும் வாடாமல் உள்ளதாலும், பொலிவுடன் காட்சியளிப்பதாலும், அவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.