ஊட்டி, செப்.5: ஊட்டி நகர உட்கோட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊட்டி டவுன் டிஎஸ்பி யசோதா தலைமை வகித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்தார். ஊட்டி அரசு கலை கல்லூரி மாணவ, மாணவிகள், என்சிசி மாணவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். டிஆர்சி யில் துவங்கிய பேரணி சேரிங்கிராஸ் சிக்னல், காந்தி சிலை வரை சென்று மீண்டும் டிஆர்சி யில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்றவர்கள் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். மது அருந்தி விட்டு வாகனங்கள் இயக்கக்கூடாது.
வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது. சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்ய வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கக்கூடாது என வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை டிஎஸ்பி யசோதா வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் தர்மசீலன், உதவி ஆய்வாளர்கள் அருண்குமார், செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.