ஊட்டி, ஆக. 27: உருளைக்கிழங்கு ஏற்றிய வேன் கவிழ்ந்து வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சங்கர் (40) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜய் ஆகியோர் ஊட்டி முத்தோரை பகுதியில் தங்கி, விவசாய கூலித்தொழில் செய்தனர். இந்நிலையில் நேற்று நஞ்சநாட்டை சேர்ந்த டிரைவர் ஆனந்தன் என்பவர் தனது பிக்கப் வேனில் உருளைக்கிழங்கு மூட்டைகளுடன் மேட்டுப்பாளைம் புறப்பட்டார். இவருடன் சங்கர், விஜய் மற்றும் இதே பகுதியை சேர்ந்த பைரவன், முருகேசன் ஆகியோரும் சென்றனர்.
முத்தோரை பகுதியில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வேனில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார், உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.