குன்னூர், ஜூலை 5: குன்னூரில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். ஊட்டச்சத்து வழங்கும் காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகளின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதே ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டமானது பழச்செடிகள் தொகுப்பு, காய்கறி விதைகள் மற்றும் பயிறு வகை விதைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. இத்திட்டத்தினை நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இளித்துரை கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தமிழகஅரசு தலைமை கொறடா ராமசந்திரன் பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள் மற்றும் பயிறு வகைத் தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.