மேல்மலையனூர், செப். 4: தள்ளுவண்டி கடைக்காரர் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் சுரேஷ். தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்ததால் வழக்கம்போல், சுரேஷ் தனது குடும்பத்தினருடன் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்த சென்றிருந்தார். இந்நிலையில் இவரது வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு வந்து வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதிலிருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து இரவு முழுவதும் கடை நடத்திவிட்டு சுரேஷ் நேற்று காலை தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை அறிந்து இதுகுறித்து வளத்தி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து வீட்டில் பணம், நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.