திருவாரூர், ஜுன் 6 கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது திருவாரூர் வாசன் நகரில் உள்ளது. தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் 3 வருட முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச விடுதி, கல்வி உதவித்தொகை, மாதந்தோறும் கல்வி ஊக்கத் தொகையாக ரூ.400 வழங்கப்படுகிறது.
இப்பள்ளியில் சேர்வதற்கு 12 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்று எழுதப்படிக்க தெரிந்தால் போதுமானது. அதன்படி நடப்பாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கல்விகட்டணம் ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும். இருபாலரும் சேரலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.