ஊட்டி, நவ.1: உழவர் சந்ைத செல்லும் சாலையில் சிலர் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உழவர் சந்தை உள்ளது. கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள இந்த உழவர் சந்தை செல்லும் சாலையோரங்களில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், இச்சாலையின் வலது புறம் மட்டுமே மக்கள் நடந்து செல்ல முடியும்.
உழவர் சந்தைக்கு செல்லும் பொதுமக்கள், ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அந்தோணியார் தேவாலயத்திற்கு செல்லும் மக்கள் அனைவரும் உழவர் சந்தை முன் உள்ள நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது இந்த நடைபாதையிலும் சிலர் ஆக்கிரமிப்பு கடைகளை வைத்துள்ளனர்.
இதனால், இந்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விபத்து அபாயமும் தொடர்கிறது. எனவே, உழவர் சந்தை முன் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.