வலங்கைமான்,மே30: வலங்கைமான் அருகே மாணிக்கமங்கலம் ஊராட்சியில் உழவரைத் தேடி, வேளாண்மை நலத்துறை திட்டத்தினை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்ததை அடுத்து விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த நலத்திட்ட உதவிகளை கலெக்டர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர். தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை அதிகரித்திடவும் உழவர்களின் வருமானத்தை பெருக்கிடவும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என பெருமிதம்.
தமிழக சட்டசபையில் ‘உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்டம்’ அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 2025-2026ஆம் ஆண்டு வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கையில் ‘உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 17116 கிராமங்களில் ஓராண்டுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
விவசாயிகளை சந்திக்கும் இந்த குழுவில், அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த குழுவினர் விவசாயிகளை சந்தித்து வயல்வெளி பாதுகாப்பு, பரப்பு, சாகுபடி, மகசூல் குறித்து உரிய விளக்கம் அளிப்பார்கள். பயிர்களுக்கு தேவையான இடு பொருட்கள், உரம் குறித்தும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்தும் உரிய விளக்கம் அளிக்க இருக்கிறார்கள்.
மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இந்த முகாம் நடத்தப்பட இருக்கிறது. குறிப்பாக, கோடை கால பயிர்கள், தரிசு நில மேம்பாடு குறித்தும் விளக்கமும், அதற்கான மானியங்களை பெறுவதற்கான முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட உள்ளது. என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், மாணிக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விவசாயிகளுக்கான உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டத்தை துவக்கிவைத்து பேசிய கலெக்டர் மோகனச்சந்திரன் கூறுகையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, வேளாண்மைக்கென ஐந்து தனி நிதிநிலை அறிக்கைகளை அளித்து, அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திட 1,94,076 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
தரிசு நிலங்களை சாகுபடிக்கு உகந்ததாக மாற்றி, நீர் ஆதாரங்களை உருவாக்கி கவனமாக மின்சாரம் வழங்கி சிக்கனமாக நீரை பயன்படுத்திட சொட்டு நீர்பாசனக் கருவிகளை அமைத்து, நீண்ட நாட்கள் பயன்தரும் பழமரக்கன்றுகளை நடவு செய்து, நிலையான வருமானத்திற்கு வித்திட்ட திட்டம் ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம். அதிகளவில் இரசயான உரங்களின் பயன்பாட்டால் மண்வளம் குன்றி, மகசூல் குறைந்து, உணவு தானியங்களில் நச்சுத்தன்மை ஏற்படுவதை தவிர்த்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம். காலநிலை மாற்றத்தினை எதிர்கொண்டு குறைந்த நீரில், வெப்பத்தினை தாங்கி வளரும் சிறுதானியப் பயிர்களின் சாகுபடி மூலம் விவசாய வளர்ச்சியை நிலைப்படுத்திட தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது.
வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதில் நவீன தொழில்நுட்பங்களின் பங்கு இன்றியமையாததாகும். இத்தொழில்நுட்பங்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு எடுத்துச் செல்வதில் வேளாண் விரிவாகத்தின் பணி மிக முக்கியமானதாகும். தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரிவாகத்தின் கடமையாகும். தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை அதிகரித்திடவும் உழவர்களின் வருமானத்தை பெருக்கிடவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தொழில்நுட்பங்களுடன் திட்டங்களையும் ஒருங்கிணைத்து உழவர்களிடம் எடுத்துச் செல்வது மிகவும் அவசியமாகும்.
உழவர்கள் பயிர்சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற பிற தொழில்களையும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர். எனவே, வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவர்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்து, தொழில்நுட்பங்களை வழங்கி அதற்கான திட்டங்களை எடுத்துக்கூறிட ஏதுவாக எவ்வித திட்டமும் தமிழ்நாட்டில் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாணிக்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விதை நெல், நெல் நுண்ணூட்டம், மண்புழு உரப்படுக்கை, சிங் சல்பேட், பருத்தி நுண்ணூட்டம், தக்கைப்பூண்டு, உயிர் உரம், பயிறு நுண்ணூட்டம் உள்ளிட்ட இடுப்பொருட்களை 10 நபர்களுக்கும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு இடுபொருட்களையும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் உழவர் கடன் அட்டை 3 பயனாளிகளுக்கும் கலெக்டர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
முன்னதாக மாணிக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கேசவன் தமிழக அரசுக்கு திட்டத்தில் செயல் படுத்தி மைக்கு தமிழக முதல்வருக்கு காணொளி வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொண்டார் இந்நிகழ்ச்சியில், வேளாண்மை கூடுதல் இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண்மைதுறை இணை இயக்குநர் பாலசரஸ்வதி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரிச்சர்ட்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சித்ரா, வேளாண்மைதுறை துணை இயக்குநர் விஜயலெட்சுமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நீதிமாணிக்கம், துணை இயக்குநர் வாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, வேளாண் அறிவியல் நிலைய திட்ட தலைவர் பெரியார் ராமசாமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் சிவனேசன், வேளாண்மை உதவி இயக்குநர் சந்தோஷ், வட்டாட்சியர் ஓம் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி சிவக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.