கடலூர், ஜூலை 31: கடலூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் நலப்பணிக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறுகையில், தமிழக முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், நிதி நிலைமை கூடுதலாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.
என்எல்சி விவகாரத்தில் விவசாயிகளின் விளைநிலங்கள் கால்வாய் பணிக்காக அழிக்கப்படுவது வேதனையாக உள்ளது. 5 ஆண்டுகளுக்கு இது போன்று கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பயன்பாடு இல்லாத நிலையில் இருந்தால் அதனை பயிர் செய்து வரும் விவசாயிகள் அல்லது சார்ந்தவர்களை மீண்டும் நிலங்கள் சாரும் என்பது சட்டத்தின் வாயிலாக தெரிகிறது.வருகின்ற காலங்களில் என்எல்சி நிர்வாகம் தனியார் மையம் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
எனவே கால்வாய்கான திட்டத்தை கைவிட்டு மீண்டும் விவசாய பூமியாக அப்பகுதியை மாற்ற வேண்டும், என்றார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, கடலூர் மாவட்ட தலைவர் ஷேக் தாவூத், மாநகரத் தலைவர் ரஹீம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.