ஈரோடு, நவ. 1: உள்ளாட்சிகள் தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று (1ம் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினமான இன்று 1ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல்,
மகளிர் சுய உதவிக்குழுவினரை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் மற்றும் இணைய வழி வீட்டுவரி, சொத்து வரி செலுத்துதல் குறித்த விபரத்தை முன்வைத்தல் உள்ளிட்ட கூட்டபொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில், வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.