உளுந்தூர்பேட்டை, ஜூன் 23: தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அனுமதி இல்லாத பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சில இடங்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள் தங்களது கொடி கம்பங்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அடுத்த சேலம் ரோடு ரவுண்டானா பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட கொடி கம்பம் உள்ளது.
இதனை அகற்றுவதற்காக டிஎஸ்பி அசோகன் மற்றும் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையிலான போலீசார் அங்கு சென்றபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு தலைமையிலான நிர்வாகிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கைது செய்த போலீசார், அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை அகற்றினர். இதனால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.