உளுந்தூர்பேட்டை, ஆக. 21: உளுந்தூர்பேட்டையில் வாட்ஸ்அப் மூலம் நெட்ஒர்க் அமைத்து விபசாரம் நடத்திய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் இளம்பெண்களின் படங்களை வாட்ஸ்-அப் மூலம் இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அனுப்பி பெண் தலைமையிலான கும்பல் விபசாரத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் கடந்த 18ம் தேதி சின்னசாமி நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் விபசாரம் நடத்தியதாக கல்பனா(44) உள்பட 2 பெண்களையும், மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த 3 சிறுமிகளை மீட்டு விழுப்புரம் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் கல்பனா என்று பெண் தான் மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பல முக்கிய புள்ளிகளும் தொடர்பில் இருப்பது உறுதியானது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் பிடித்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து உளுந்தூர்பேட்டை -விருத்தாசலம் சாலையில் வசிக்கும் கல்யாணி (44) என்ற பெண்ணையும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாண்டியன் (48) என்பவரையும் கைது செய்தனர். இருவரும் தனித்தனியே வாட்ஸ்அப் குரூப் தொடங்கி அதில் இளம்பெண்கள், சிறுமிகளின் படங்களை அனுப்பி அதன்மூலம் விபசாரம் நடத்தி வந்துள்ளனர்.
தேர்வு செய்யப்படும் பெண்கள், சிறுமிகளை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைத்து அதற்கான பணத்தை கூகுள் பே மூலம் பெற்று வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதில் சிறுமிகளை வைத்து விபசாரம் நடத்தியதில் தொடர்புடைய நபர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதில் பெரும்புள்ளிகள் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.