உளுந்தூர்பேட்டை, மே 28: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கிளியூர் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று குளத்தில் வாலிபர் சடலம் மிதப்பதாக அங்கு இருந்தவர்கள் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சடலமாக கிடந்த வாலிபர் நரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் சுபாஷ் (25) என்பது தெரியவந்துள்ளது.
இவருடன் மேலும் இரண்டு பேர் அந்த பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுபாஷ் குளத்து நீரில் அழுத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன் சுபாஷுடன் வந்ததாக சொல்லப்படும் இரண்டு பேர் குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.