உளுந்தூர்பேட்டை, அக். 18: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆயிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவருடைய மகன் தமிழ்ச்செல்வன் (26). இவர் கடலூர் சிப்காட்டில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டு வேலை சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை உளுந்தூர்பேட்டை அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலை ஒலையனூர் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் தமிழ்ச்செல்வன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் திருமணம் ஆகாத தமிழ்ச்செல்வனுக்கு குடிப்பழக்கம் உள்ளதும், இதனால் பெற்றோரிடம் கடந்த வாரம் சண்டை போட்டுவிட்டு வந்தவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டதும் தெரிந்தது. இருந்தும் அவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.