உளுந்தூர்பேட்டை, ஜூன் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக முதல்வர் கடந்த மாதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பழைய பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து மாணவ, மாணவிகள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் சேர ஆன்லைன் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்கு சென்னை கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் கல்லூரி முதல்வராக முனைவர் செல்வராஜ் மற்றும் பிஏ தமிழ் பாடப் பிரிவுக்கு முனைவர் சம்பத்குமார், பிஏ ஆங்கில பிரிவுக்கு முனைவர் வின்சென்ட் தனிநாயகம், பிஎஸ்சி கணினி அறிவியல் பாடத்திற்கு முனைவர் செல்வராஜ், பி.காம் வணிகவியல் பாடப்பிரிவுக்கு முனைவர் தமிழ்வேல், பிபிஏ பாடப்பிரிவுக்கு முனைவர் மணிவண்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
உளுந்தூர்பேட்டை அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பொறுப்பேற்பு
0