ராமநாதபுரம், ஆக.28: உலையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தது. முதுகுளத்தூர் அருகே உலையூர் கிராமத்தில் மருதாருடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. மண் குதிரை மற்றும் தவளும் பிள்ளை, நாகர், காளை மற்றும் காவல் தெய்வங்களின் உருவங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அய்யனார் கோயிலில் வைத்தனர். கிராம மக்கள் பொங்கல் வைத்து, படையல்களை படைத்து வழிபட்டனர்.
மேலும் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து 11 காளைகள் கலந்து கொண்டது. நூற்றிற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் போட்டியை பார்த்து ரசித்தனர். காளை முட்டியதில் 5க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் லேசான காயமடைந்தனர். வெற்றிப் பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.