திருத்துறைப்பூண்டி, ஜூன் 18: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ரத்த தானம் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் முகுந்தன் தலைமை வகித்து பேசும்போது, உயிரை காக்கும் ரத்த தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதி உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது என்றார். முன்னதாக இளம் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார்.
மனவளக்கலை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசும்போது, ரத்ததானம் செய்வதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயம் குறைகிறது. உடலில் புதிய ரத்த அணு உருவாவதை முடுக்கு விக்கிறது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று குறிப்பிட்டு கல்லீரலையும் காக்கும் என்று விளக்கினார்.
நீரின்றி அமையாது உலகு என்பதுபோல ரத்தமின்றி இயங்காது உடல் என்றும் ஆரோக்கியமான மனிதர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம் என்று குறிப்பிட்டார். முடிவில் மாணவர் குகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.