திருவாடானை, மே 26: திருவாடானை அருகே முத்துமாரியம்மன் கோயில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவாடானை அருகே பழங்குளம் ஊராட்சி, கீழ்ப்புலி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் 4ம் ஆண்டு வைகாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு உலக நன்மைக்காகவும், பொது அமைதி வேண்டியும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் 208 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.
அதற்கு முன்னதாக கோயில் மூலவருக்கு பால், பழங்கள், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.