உலகின் முன்னணி இசைக்குழுக்களில் ஒன்றாக வலம் வருகிறது ‘பிளாக்பின்க்’. தென் கொரியாவைச் சேர்ந்த ‘ஒய்ஜி என்டர்டெயின்மென்ட்’ எனும் இசை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் குழு, கே-பாப், ஹிப் ஹாப், இடிஎம், ட்ராப் இசையில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.கே-பாப் இசையின் ராணிகள் என்று புகழப்படும் ஜிசோ, ஜென்னி, ரோஸ், லிசா ஆகிய நான்கு இளம் பெண்கள்தான் இதன் உறுப்பினர்கள். சமீபத்தில் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த பெண்கள் இசைக்குழுவும் இதுதான். நான்கு பெண்கள் மட்டுமே இருந்தாலும் கூட உலகில் பெண்களின் மிகப்பெரிய இசைக்குழுவாக மதிக்கப்படுகிறது ‘பிளாக்பின்க்’.இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தக் குழுவை உருவாக்குவதில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது ‘ஒய்ஜி என்டர்டெயின்மென்ட்’. ஜூன் 1, 2016ல் ‘பிளாக்பின்க்’கின் முதல் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் ஜென்னி. நியூசிலாந்திலிருந்து தென் கொரியாவிற்கு இடம்பெயர்ந்து, 2010ம் வருடத்திலிருந்து ‘ஒய்ஜி’யில் பயிற்சி பெற்றார். நூற்றுக்கணக்கானவர்களின் மத்தியில் சிறப்பாகச் செயல்பட்டு ‘பிளாக்பின்க்’கின் முக்கிய ராப் பாடகியாகிவிட்டார் ஜென்னி.அடுத்து தாய்லாந்தைச் சேர்ந்த லிசா. 2010 ம் வருடம் தாய்லாந்தில் ‘ஒய்ஜி’ நிறுவனம் பிளாக் பின்க் உறுப்பினர் தேர்வு பயிற்சிக்காக ஒரு போட்டி வைத்தது. இதில் சுமார் 4 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் லிசாதான். 2011ம் வருடம் முதல் வெளிநாட்டுப் பயிற்சியாளர் என்ற அடையாளத்துடன் தென் கொரியாவில் உள்ள ‘ஒய்ஜி’யில் பயிற்சி பெற்றார். இன்று ‘பிளாக்பின்க்’கின் முக்கிய டான்ஸர் இவர்தான்.தென்கொரியாவைச் சேர்ந்த ஜிசோ 2011லிருந்து ‘ஒய்ஜி’யில் பாடுவதற்கான பயிற்சி பெற்று ‘பிளாக்பின்க்’கின் மூன்றாவது உறுப்பினரானார். அடுத்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரோஸ். அங்கே 700 போட்டியாளர்களில் முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்டு ‘பிளாக்பின்க்’கின் கடைசி உறுப்பினரானார் ரோஸ். உறுப்பினர்கள் சரியாக அமைந்தபிறகு 2016ல் உதயமானது ‘பிளாக்பின்க்’. ஆகஸ்ட் 8, 2016ல் ‘பிளாக்பின்க்’கின் முதல் ஆல்பமான ‘ஸ்கொயர் ஒன்’ வெளியானது. கொரியன் பாப்புலர் மியூசிக் என்கிற கே-பாப் இசை வகைமைகளில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது. முதல் ஆல்பத்திலேயே பிரபலமாகிவிட்டது ‘பிளாக்பின்க்’.அடுத்த சில வருடங்களில் உலகின் முக்கிய நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இப்போதும் கூட இசை சுற்றுலாவில்தான் இருக்கிறது ‘பிளாக்பின்க்’.மட்டுமல்ல, ‘பிளாக் வேணோம்’, ‘ஷட் டவுன்’, ‘டைபா கேர்ள்’, டூ-டூ-டூ’, ‘கில் திஸ் லவ்’… போன்ற ஏராளமான மெகா ஹிட் பாடல்களை இசை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது இந்த இசைக்குழு.மேடையில் நடனமாடிக்கொண்டே பாடுவது ‘பிளாக்பின்க்’கின் தனித்துவம். ஆங்கிலமும், கொரிய மொழியும் கலந்த இவர்களது ஒரு பாடலைக் கேட்டுவிட்டாலே போதும். மனது தானாகவே மற்ற பாடல்களைக் கேட்கத் தூண்டுகிறது. அந்தளவுக்கு மொழியைத் தாண்டி ‘பிளாக்பின்க்’கின் பாடல்கள் நம்மை வசீகரிக்கின்றன.அதனால்தானோ என்னவோ இவர்களின் இசை நிகழ்ச்சிகளிலும், இவர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போதும் உலகமெங்கும் இளசுகளின் கூட்டம் அரங்கத்தை நிறைக்கின்றன. அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை ‘பிளாக்பின்க்’குக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். ரசிகர்களில் பெரும்பாலானோர் பதின்பருவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.தவிர, ‘பிளாக்பின்க்’கின் ‘பர்ன் பிளாக்’ எனும் ஆல்பம் 20 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. இதன் மூலம் தென் கொரியாவிலே அதிக அளவு ஆல்பத்தை விற்பனை செய்த முதல் பெண் இசைக்குழு என்ற பெருமைையத் தன்வசமாக்கியது ‘பிளாக்பின்க்’.மட்டுமல்ல, ‘பில்போர்டு ஹாட் 100’ எனும் முக்கியமான இசை தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த பெண்களின் இசைக்குழு, ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் ஆஃப் அமெரிக்கா, பிரிட்டிஷ் போனோகிராபிக் இண்டஸ்ட்ரி, ஆஸ்திரேலியன் ரெக்கார்டிங் இண்டஸ்ட் ரி அசோஷியேஷன் ஆகிய நிறுவனங்களின் சான்றிதழ்களைப் பெற்ற கொரியாவின் முதல் பெண்களின் இசைக்குழு, யூடியூப்பில் 200 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளிய இசைக்குழு, அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட இசைக்குழு, மிகுந்த செல்வாக்கு மிகுந்த தென் கொரியாவின் பிரபலங்கள், ‘டைம்’ பத்திரிகையின் ‘2022ம் வருடத்துக்கான என்டர்டெயினர்’… என்று ‘பிளாக்பின்க்’கின் சாதனைப் பட்டியல் நீள்கின்றது. – த.சக்திவேல்…