சென்னை, அக்.23: உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், பல்வேறு நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் நாள்தோறும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்தியாவின் மற்ற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை எப்போதும் மிகவும் பாதுகாப்பான நகரம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்தியாவில் பெண்கள் வேலை பார்க்க, மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை, கடந்த ஜனவரி மாதத்தில் தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டது. பாதுகாப்பு சூழல், போக்குவரத்து வசதி, பணி வாய்ப்புகள், சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம் சென்னை. அத்துடன், முதல் 10 இடங்களில் கோவை, மதுரை ஆகிய நகரங்களும் இடம்பிடித்து இருந்தது. இந்நிலையில், தற்போது உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது சென்னை.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் பணியாற்றியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களும், அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பலரும் சென்னையில் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே, இந்தியாவின் மற்ற நகரங்களை விட, சென்னையில்தான் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக கூறுவதுண்டு. அதை தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை உறுதி செய்துள்ள நிலையில், தற்போது உலகளாவிய சேப்டி இன்டெக்ஸ் என்ற கணக்கீடும் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்கள் குறித்த 2023ம் ஆண்டுக்கான அறிக்கையை செர்பியாவை சேர்ந்த NUMBEO என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 334 நகரங்களை உள்ளடக்கிய இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது, சட்டத்திட்டங்களை கடுமையாக வைத்திருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அபுதாபி மற்றும் அஜ்மான் ஆகிய நகரங்கள்தான். மூன்றாவது இடத்தை கத்தாரின் தோஹா பிடித்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் எந்த இந்திய நகரங்களும் இடம்பெறவில்லை. ஆனாலும், 40வது இடத்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மங்களூருவும், 76வது இடத்தை குஜராத் மாநிலம் வதோதராவும், 82வது இடத்தை அதே மாநிலத்தைச் சேர்ந்த அகமதாபாத்துமே பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில், சூரத் 94வது இடத்தையும், நவி மும்பை 105வது இடத்தையும் பிடித்திருந்தாலும், இவை எதுவுமே பெருநகரங்கள் இல்லை. அதே நேரத்தில், பாதுகாப்பு அளவீட்டில் 60 சதவீதத்தையும், குற்ற அளவீட்டில் 40 சதவீதத்தையும் கொண்டுள்ள சென்னை, 127வது இடத்தை பிடித்துள்ளது. அதன் அடிப்படையில், மிகவும் பாதுகாப்பான இந்தியாவின் பெருநகரம் அதாவது மெட்ரோ நகரம் என்று பார்த்தால், அது சென்னை தான். இதற்கு அடுத்த இடத்தில்தான், இந்தியாவின் பிற மெட்ரோ நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
* குற்ற சம்பவங்களில் டெல்லி முதலிடம்
இந்தியாவில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்கள் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது நாட்டின் தலைநகரான டெல்லி, 2வது இடத்தை நொய்டாவும், 3வது இடத்தை குர்கானும் பிடித்துள்ளன. உலக அளவில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரம்.
முதல் 10 இடங்களை பிரேசிலை சேர்ந்த 4 நகரங்களும், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 3 பகுதிகளுமே பிடித்துள்ளன. முதல் 100 இடங்களில் 72வது இடத்தை டெல்லியும், 93வது இடத்தை நொய்டாவும் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எப்போதும் பதற்றமாக இருக்கும் பாகிஸ்தானின் கராச்சி 96வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.