செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், பவுஞ்சூர் அடுத்த நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துரைபாபு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்ததையடுத்து அவரது உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக மருத்துவர்களிடம் தெரிவித்ததையடுத்து துரைபாபுவின் உடல் உறுப்புகளை மருத்துவ நிர்வாகம் பெற்றுக்கொண்டனர். இதனைதொடர்ந்து, துரைபாபு உடல் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான நீலமங்கலம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் அளிப்பவர்களின் உடலுக்கு அரசு மரியதையுடன் உடல் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், மதுராந்தகம் கோட்டாட்சியர் தியாகராஜன், செய்யூர் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் துரைபாபு உடலுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து துரைபாபு உடல் நேற்று முன்தினம் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.