நன்றி குங்குமம் டாக்டர்ஆயுர்வேதம்… ஆரோக்கியம்…‘தூங்காதே’ என்று எச்சரித்த காலம் சென்று, இப்போது சரியான நேரத்தில் தூங்கு என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம். உரிய நேரத்தில் தூங்காவிட்டால் ‘ஆபத்து’ என்று அறைகூவல் விடுகிற காலம் வந்துவிட்டது.சமூக வலைதளங்களில் வயது வித்தியாசமின்றி அனைவரும் நேரத்தைச் செலவிடுவது முதல் எண்ணற்ற காரணங்கள் இதற்கு உண்டு. இப்படி உறக்கம் இழக்கும் தாக்கத்தால் வரும் உடல் உபாதைகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டேயிருக்க வேண்டிய பொறுப்பும் மருத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.சரியான நேரத்தில் உடலுக்கும், வயதுக்கும் தக்க வண்ணம் சரியான கால அளவில் இருண்ட,; காற்றோட்டமான அறையில் எந்தவித இடையூறும் இல்லாத தூக்கம் கொள்ள வேண்டும். இன்றைய வாழ்வின் நவீன உபகரணங்களும், சமூக வலைதளங்களின் ஆதிக்கமும் வரும் முன்னர் இருந்த பண்டைய கால மக்கள் சூரியன் அஸ்தமனம் ஆனவுடன் உறங்கச் சென்றுவிடுவார்கள். ஆனால், தற்போது மணி பத்தரை ஆனாலும் பெரும்பாலானோர் நித்திரை கொள்வதில்லை. முக்கிய காரணம் கைபேசி.இன்று எதில் நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோமோ இல்லையோ நவீன வாழ்க்கை முறையால் தூங்கும் நேரம் குறைந்து தூக்கமின்மை நோயில் அவதிப்படும் விஷயத்தில் அதிகமாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறோம். கண் அயராது உழைத்தால்தானே முன்னேற முடியும் என்று கேட்கத்தோன்றும் அல்லவா! ஆயுர்வேதம் உங்களை அதிகமாகவும் தூங்கச் சொல்லவில்லை. அதேசமயம் தூங்காமல் விழித்துக்கொண்டு வேலையும் செய்யச் சொல்லவில்லை. சராசரியான தூக்கம் மனிதனுக்கு அவசியம் என்பதை கீழ்க்காணும் கூற்றின் மூலம் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதாவது மனித வாழ்க்கையில் பிணியிலிருந்து பேணிக்காக்க மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை : உணவு, உறக்கம், நல்லொழுக்கம். மேற்கண்ட மூன்றும் மனித வாழ்வின் தூண்கள் போன்றவை. மூன்று தூணில் ஏதேனும் ஒரு தூணில் மாறுபாடு ஏற்பட்டாலும் ஆரோக்கியம் சரியத் தொடங்கிவிடும். கண் விழித்து படித்தால் அறிவைப் பெற முடியும். கண் விழித்து உழைத்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்பது எல்லாம் ஏட்டு சுரைக்காய் போன்ற எண்ணங்கள்தான். உண்மையில் உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டு செய்யும் மற்ற விஷயங்கள் வாழ்க்கைக்கு உதவாது. அதே நேரத்தில் போதுமான உறக்கத்துக்குப் பிறகு, மாணவர்கள் படித்தால் அப்போது பாடங்கள் மனதில் நன்கு பதியும். தொழில் வாழ்க்கையில் இருப்பவர்களும் போதுமான தூக்கத்தை மேற்கொண்டால்தான் மனமும், உடலும் தெளிவாகி மேலும் வெற்றி பெற வழிகாட்டும்.ஏனெனில் ஒரு மனிதனுடைய சுகம், துக்கம், ஞானம், அஞ்ஞானம், தைரியம், தைரியமின்மை, ஆண்மை, ஆண்மையின்ைம, பலம், பலமின்மை, வாழ்க்கை இவை அனைத்தும் தூக்கத்தைப் பொறுத்துத்தான் அமைகிறது. அதாவது நன்றாக தூங்கினால் வாழ்வில் சுகம், ஞானம், பலம், தைரியம், ஆண்மை, ஆரோக்கியமான வாழ்வு இவை அனைத்தும் நன்றாக அமையப்பெறும். தூக்கத்தில் ஏதேனும் குறைபாடுயிருந்தால் குறைந்தோ கூடினாலோ வாழ்வில் தக்கம், தைரியமின்மை, ஆண்மையின்மை, பலமின்மை, அஞ்ஞானம், நோயுடன்கூடிய வாழ்க்கையை கிடைக்கப் பெறுவார்கள். ஆக, தூக்கம் என்பது மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு வளர்சிதை மாற்றத்திற்கும், உடல் மற்றும் மனதிற்கும் மிக முக்கியமானவை என்பதை அக்காலத்திலேயே ஆயுர்வேதம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஆயுர்வேத மருத்துவத்துறையில் தூக்கத்திற்கு ‘நித்தா’ என்று பெயர். அப்படியென்றால் ‘நி+த்தா’ அதாவது, ஒரு; குறிப்பிட்ட கால அளவு ‘தன்னுணர்வில் இல்லாத நிலை’ என்பதே தூக்கம் ஆகும். ஒரு குறிப்பிட்ட கால அளவு என்பது குறிப்பாக இரவு வேளையில் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் உறக்கம் மேற்கொள்ள வேண்டும். உறக்கம் ஏற்படும் விதம் மற்றும் அவற்றின் வகைகளை குறித்தும் ஆயுர்வேதம் மிகத்தெளிவாக விளக்கியுள்ளது.பொதுவாக தூக்கத்தை மூன்று வகையாக ஆயுர்வேதம் பிரிக்கிறது.(1) இயற்கையாக இரவில் ஏற்படும் தூக்கம்.(2) மந்த புத்தியால் எப்போதும் தூங்கும் நிலை.(3) நோயினால், உடல் ரீதியாக/ மனரீதியாக ஏற்படும் தூக்கம்.மேற்கண்டவற்றில் இயற்கையாக ஏற்படும் தூக்கமே ஆரோக்கியம். மற்ற இரண்டும் ஆரோக்கிய பாதிப்பால் உண்டாகும் மயக்க நிலை என்று கூட பொருள் கொள்ளலாம். உறக்கத்தை எக்காரணத்தைக் கொண்டும் தவறவும் கூடாது. வந்தால் தடுக்கவும் கூடாது. ‘தூக்கம் வர மாட்டேங்குதே’ என்று தவிப்பவர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். மன உளைச்சல்கள், கவலைகளை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற இத்தகைய சஞ்சலங்களைப் போக்க தியானம், பிராணாயாமம், யோகாசனம் போன்றவைகளை மேற்கொள்ளலாம். உறங்கும் அறையை தூய்மையாகவும், துர்நாற்றம் இல்லாமலும், காற்றோட்டமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். இரவில் சிறிதளவு ஈரம் இல்லாத பாதங்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.மருதோன்றிப்பூ அல்லது நொச்சியிலை கிடைக்கும்பட்சத்தில் அவற்றைத் தலையணையாக பயன்படுத்தலாம். பஞ்சுத்துணியில் அவற்றைச் சுற்றியும் அதன் மேல் தலைவைத்துத் தூங்கலாம். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆயுர்வேத மருத்துவத்துறையில் மேற்கொள்ளும் ‘சிரோதாரா’ என்ற நச்சுக்கள் நீக்கும் சிகிச்சையை மேற்கொள்வதும் நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.அமுக்கிராக்கிழங்கை பொடி செய்து இரவு ஒரு வேலை பாலுடன் கலந்து மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம். தூங்கச் செல்லும் முன் பசும்பால் எடுத்துக்கொண்டால் இரவில் நல்ல தூக்கத்தை பெற முடியும். நல்ல ஜீரண சக்தி உடையவர்கள் மட்டும் இரவில் எருமைப்பால் சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமாக, இரவு நேரத்தில் சமூக வலைதளங்களில் அதிகமாக ஈடுபடக்கூடாது. உறக்கத்தை தவறாமல் மேற்கொண்டால் உயர்வான வாழ்வை பெறலாம் என்பதில் ஐயமில்லை.அதிக தூக்கம் வந்தால் என்ன செய்யலாம்? அதிகம் தூக்கம் வருவதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். திரிகடு சூரணத்தை தேனில் குழைத்து காலை/மாலை இருவேளை எடுத்துக்கொள்ள வேண்டும். மூக்கு துவாரங்களின் வழியே மருந்துகளை உட்செலுத்தும் ‘நஸ்யம்’ என்ற சிகிச்சையை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம். ‘நாசிக சூரணம்’ போன்ற மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொண்டால் பயனுள்ளதாகயிருக்கும்.– விஜயகுமார்
உறக்கம் தவறேல்! காலம் மாறிவிட்டது!
previous post