மதுரை, பிப். 24: விவசாய நிலங்களில் உர பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: மண் ஆய்வின் அடிப்படையில் உரமிடுதல் வேண்டும். கார மண்ணிற்கு அமில உரங்கள், அமில மண்ணிற்கு கார உரங்களை அளிப்பது போன்ற மண் எதிர் விளைவுகளை பொறுத்து உரங்களை தேர்வு செய்ய வேண்டும். உரங்களை மேலோட்டமாக இல்லாமல், 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவிற்கு விதையின் அருகில் அல்லது அடியில் இட வேண்டும். இதனால் களை வளர்ச்சி தடுக்கப்படும்.
கடின மண் வகையில், தழைச்சத்து, உரத்தில் பாதி அளவு அடியுரமாக இட்டு, 1 வாரத்திற்குள் அதிக நீர் பாய்ச்சுதல், தேங்குதல் கூடாது. நீரை வடித்தும் களைகளை எடுத்த பிறகும் மேல் உரமிட வேண்டும். அமில மண்களை சுண்ணாம்பு பொருட்களுடன் தேவைக்கேற்ப நேர்த்தி செய்ய வேண்டும். வறண்ட நிலங்களில் தழைச்சத்தை மேல் உரமாக இட வேண்டும். அங்கக அல்லது பசுந்தாள் உரங்களை 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இட வேண்டும். தகுந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முறையான பண்படுத்துதல் முறைகளை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.