செங்கல்பட்டு, நவ.15: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். அந்தவகையில், நேற்று முன்தினம் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் உதவி ஆய்வாளர் தேசி, சிறப்பு தலைமை காவலர் குமாரவேல் மற்றும் காவலர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் 4வது நடைமேடையில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால், ரயில் நிலைய காவல்படை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவர் வைத்திருந்த பையை சோதித்தபோது அதில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 200 ரூபாய் இருந்தது. விசாரணையில், அவர் சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த குமார் (51) என்பதும், பணத்துக்கான உரிய ஆவணம் இல்லாததும், கடந்த 20 ஆண்டுகளாக சென்னை சவுகார்பேட்டையில் மொத்த வியாபார மளிகைக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும், ‘‘செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைகடைகளுக்கு மளிகை பொருட்கள் லட்சக்கணக்கான ரூபாய் கடனுக்கு கொடுப்பது என்றும், அந்த பணத்தை மாதாந்தோறும் வசூலித்துவிட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் சென்று அதன் பின்னர் பைக்கில் சவுகார்பேட்டைக்கு செல்வேன்’’ என போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ₹8.87 லட்சத்தை சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரி பாலச்சந்திரனிடம் போலீசார் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், ஹவாலா பணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.