ஆரணி, நவ. 8: ஆரணி டவுனில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் உரிமம் ரத்து செய்யப்பட்ட 26 பட்டாசு கடைகள் வரும் 12ம் தேதி வரை மட்டுமே இயங்க நோட்டீஷ் வழங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளார். தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மேலும், தீபாவளி பண்டிகையொட்டி ஆரணி வருவாய் கோட்டத்தில் உள்ள ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய 4 தாலுகாக்களில் 54 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வியாபாரிகள் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் பெற்று சில்லரை விற்பனை செய்ய பல்வேறு பகுதிகளில் பட்டாசு கடை வைத்துள்ளனர். இந்நிலையில், ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைத்துள்ள பட்டாசு கடைகளில் அரசு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.
அப்போது, அரசு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் பட்டாசு கடைகள் வைத்திருப்பதும், மேலும், வெடிபொருள் சட்டவிதி 2008 பிரிவு 83 மற்றும் 86 முரணாக பட்டாசு கடைகள் அமைந்துள்ளது தெரியவந்தது. இதனால், ஆரணி பகுதியில் பட்டாசு கடைகள் வைத்துள்ள வியாபாரிகளை அழைத்து கடைகளில் உள்ள குறைபாடுகளை தெரிவித்து உடனடியாக, அதனை சரிசெய்ய ஆர்டிஓ அலுவலகத்தில் வருவாய்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு ஆர்டிஓ நேர்முக உதவியாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினர். தாசில்தார் மஞ்சுளா முன்னிலை வகித்தார். தொடர்ந்து, நேர்முக உதவியாளர் செந்தில்குமார் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, ஆரணி டவுன் பகுதியில் வைத்துள்ள 30 கடைகள் உள்ளது. இதில் 4 கடைகள் மட்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் உள்ள மற்ற 26 பட்டாசு கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தற்போது வரும் 12ம் தேதி வரை செயல்பட தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட கடைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு குறைபாடுகளை நிவர்த்தி செய்தபின் உரிமம் கோரி புதியதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தாசில்தார் தெரிவித்தார்.
இதையடுத்து பட்டாசு கடைகளில் அனைத்து தீ தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும், எதிர்பாராமல் வெடிவிபத்துகள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதற்கு, கடை உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்றுக்கொண்டால், அதுவரை கடைகள் செயல்பட அனுதிக்கிறோம் என தெரிவித்தனர். இதனை, மீறி அதன்பிறகு பட்டாசு விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடைகளில் கண்டறியப்பட்டுள்ள குறைபாடுகள் அனைத்தையும் சரிசெய்யது, பின்னரே கடைகள் அனுமதிக்கப்படும் என பட்டாசு கடை உரிமையாளர்களை அதிகாரிகளை எச்சரித்தனர். தொடர்ந்து, அனைத்து பட்டாசு கடை உரிமையாளருக்கும் அவர்கள் கடைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதனை உடனடியாக சரிசெய்ய செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது.