திருச்சி, மே 15: உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி திருச்சியில் நேற்றும் (மே 14), நாளையும் (மே 16) ஆகிய நாட்களில் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி, ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்கள் மற்றும் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 3658 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உயர்கல்வி படிப்பைத் தொடர தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் வகையில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.
திருச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களான திருச்சி நகரம், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மற்றும் அந்தநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி நேற்றும், லால்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களான லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம், உப்பிலியபுரம் மற்றும் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி நாளையும் நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் கல்லூரிக் கனவு வழிகாட்டி கையேட்டினை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரயா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.