துறையூர், ஆக.7: உப்பிலியபுரம் அருகே போதையில் ரேசன் கடை விற்பனையாளரை தாக்கி கடையை சூறையாடிய போதை ஆசாமி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிபாளையம் நடுத்தெருவில் ரேஷன் கடை உள்ளது. இக்கடை மூலம் 980 ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை விற்பனையாளர் சாந்தி (58) வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். கடந்த மாதம் பாமாயில் கிடைக்கப் பெறாதவர்களுக்கு இந்த மாதம் பாமாயில் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு போதையில் வந்த செந்தில் (35) என்ற நபர் தனக்கு ஆகஸ்ட் மாதத்திற்குரிய பாமாயில் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு விற்பனையாளர் சாந்தி சென்ற மாதம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு கொடுத்து முடித்த பின்பே இந்த மாதத்திற்கு உரியவர்களுக்கு தர முடியும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் விற்பனையாளர் சாந்தியை தாக்கி இயந்திரம், எடை தராசு, பதிவேடு நோட்டு மற்றும் பொருட்களை அடித்து சூறையாடி அங்கிருந்து சென்றுவிட்டாராம். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசில் விற்பனையாளர் சாந்தி புகார் அளித்தார். அதன்பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.