காஞ்சிபுரம், நவ.19: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-2023ம் ஆண்டிற்கான பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உத்திரமேரூர் வட்டாரம், மேனல்லூர் கிராமம் விவசாயிகளுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன. இந்த தென்னங்கன்றுகள் உரிய பயனாளிக்கு வழங்கப்பட்டுள்ளதா எனவும், உரிய முறையில் தென்னங்கன்றுகள் பராமரிக்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் நவம்பர் 22ம் தேதிக்குள் பயிர்காப்பீடு பதிவு மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து, கிசான் கடன் அட்டை திட்டத்தில் பயன்பெறுவதற்கு கிசான் கடன் அட்டை விண்ணப்பம் கிராமந்தோறும் நடைபெறும் முகாமில் ஆதார் அட்டை நகல், நில ஆவணங்கள் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், விவசாயி புகைப்படம் மற்றும் பான் கார்டு நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து, சமர்ப்பித்து திட்டத்தில் பயனடையுமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, வெள்ள தடுப்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் மற்றும் உத்திரமேரூர் ஏரி ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, வெளிப்புற நோயாளிகளிடம் நலன் விசாரித்து மருந்துகளின் இருப்பு நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் பிரின்ஸ் கிளெமென்ட், வேளாண்மை துணை இயக்குநரும், கலெக்டரின் நேர்முக உதவியாளருமான (வே)(பொ) ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.