உத்திரமேரூர், ஜூலை 8: உத்திரமேரூர் அருகே நடந்த வாசீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உத்திரமேரூர் அடுத்த வயலக்காவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஏலவார்குழலி அம்மை சமேத ஸ்ரீ வாசீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. அந்த பணியானது அண்மையில் முடிவடைந்தநிலையில் நேற்று கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களும் கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு அதில் புண்யாவாசனம், வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து, நேற்று காலை மூன்றாம் கால யாக வேள்வி பூஜை முடிந்தபின் மேளதாளங்கள், வாணவேடிக்கைகளுடன் புனிதநீர் கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.