உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே தம்பதியை தாக்கி 6 சவரன் நகைகள், ரூ.6 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். உத்திரமேரூர் அருகே சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி தீபா (35). இந்த தம்பதிக்கு பிரதீப் என்ற மகனும், வினிஷ்கா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் பிரகாஷ், தீபா ஆகிய 2 பேரும், செங்கல்பட்டு அருகே வடபாதி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, உத்திரமேரூர் அடுத்த சிறுதாமூர் அருகே பொற்பந்தல் கிராமத்தின் அருகே சென்றபோது, 2 பைக்குகளில் வந்த 4 மர்ம நபர்கள் திடீரென பிரகாஷின் பைக்கை வழிமறித்தனர்.
பின்னர், இருவரையும் தாக்கிவிட்டு, தீபா கழுத்தில் இருந்த தாலி, கம்பல், செயின் உள்ளிட்ட 6 பவுன் நகை மற்றும் பிரகாஷ் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துகொண்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ், சாலவாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக் பெற்று திரும்பினார்.
பின்னர், இதுகுறித்து சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.