காஞ்சிபுரம், ஜூலை 26: உத்திரமேரூர் அருகே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த வாலிபரை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 118 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கருவேப்பம்பூண்டி அருகே கிராம குளக்கரையில் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையில் போலீசார் சிவகுமார், சக்கரவர்த்தி ஆகியோர் மாறுவேடத்தில் சென்று அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு கோணிப்பையில் எதையோ வைத்துக்கொண்டு இருந்த ஒருவர், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயற்சி செய்தார். அவரை மடக்கிப்பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் கருவேப்பம்பூண்டி பால்வாடி தெரு சேர்ந்த கோபிநாத் (46), என்பதும், கோணிப்பையில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் தாம்பரம் பகுதியில் இருந்து 180 மிலி அளவுள்ள அதிக போதை தரக்கூடிய போதைப்பொருளை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பதாக தெரிவித்தார்.
அந்த பாட்டில்களை திறந்து பார்த்தபோது ஒரு விதமான விஷ நெடியும் கண்களில் எரிச்சலும் வாய்க்குமட்டல் ஏற்படுவதையும் உணர்ந்துள்ளனர். இதனை உட்கொண்டால் மனித உயிருக்கும் உடல் உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என அறிந்து அவரை கைது செய்து மேல் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, அவரின் வீட்டில் நடத்திய சோதனையில் அரசு மதுபான பாட்டில்கள் 118 கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, உத்திரமேரூர் அரசு மதுபான கடையில் சூப்பர்வைசர் தினகரன் மற்றும் சேல்ஸ்மேன் திருநாவுக்கரசு ஆகியவரிடம் கூடுதல் விலைக்கு வாங்கி டாஸ்மாக் மதுபான கடை மூடியிருக்கும் நேரங்களில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கோபிநாத் மீது வழக்குப்திவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். விஷ நெடி மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் திரவத்தினை தாம்பரம் பகுதியில் விற்ற நபர் குறித்தும் மதுவிலக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.