உத்தமபாளையம், மே 25: உத்தமபாளையம் வட்டாரத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் தேனி கலெக்டர் ஷஜீவனா, பன்றிகள் வளர்க்கும் பண்ணைகளில் பன்றிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்திட உத்தரவிட்டார். இதன்படி உத்தமபாளையம் வட்டார அளவில் நடந்த பன்றி காய்ச்சல் முகாமிற்கு, தேனி மாவட்ட மண்டல கால்நடைத்துறை இயக்குனர் டாக்டர் கோயில் ராஜா தலைமை தாங்கினார்.
கால்நடைத்துறை நோய் தடுப்பு புலனாய்வுத்துறை உதவி இயக்குநர் டாக்டர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இந்த பகுதிகளில் உள்ள அனைத்து பன்றி வளர்க்கும் பண்ணைகளிலும் கால்நடைத்துறை சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. உத்தமபாளையம் வட்டாரத்தில் நாகையகவுண்டன் பட்டி ஆணைமலையன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்க்கப்படும் பன்றிகள் பண்ணைகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்வில் ராயப்பன்பட்டி டாக்டர் அகமது முக்தார், கால்நடைத்துறை டாக்டர்கள் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.