உத்தமபாளையம், ஜூலை 12: உத்தமபாளையம் பகுதியில் முதல்போக நெல்நடவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முதல்போக நெல் நடவு பணிக்காக, தற்போது முல்லைப்பெரியாறு அணையிலிருந்து 1,200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பெரியாறு பாசன கால்வாயிலிருந்து தற்போது 16 கிளை கால்வாய்களுக்கு தண்ணீர் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், உத்தமபாளையம், கோவிந்தன்பட்டி, காக்கில்சிக்கையன்பட்டி, அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாசன நீர் கிடைத்து, மகிழ்ச்சியுடன் விவசாயிகள் நடவுப் பணிகளை தொடங்கி விறுவிறுப்பாக பணிகளை செய்து வருகின்றனர். இருப்பினும், போதுமான ஆட்கள் கிடைக்காததால் சிரமமடைந்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், இந்தாண்டு பெரியாறு அணையின் நீர்மட்டம், குறையாத நிலையில், முதல் போக நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ளன. விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது’’ என்றனர்.