திருத்தணி, ஜூலை 3: பொதட்டூர்பேட்டை அருகே கேசவராஜுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55), விவசாயி. இவர் கடந்த 7 நாட்களுக்கு முன்பு பொதட்டூர்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததால், அங்கு இருந்த நபரிடம் தனது கார்டை கொடுத்து ரகசிய பின் நம்பரைக் கூறி பணம் எடுத்து தர கேட்டுள்ளார். அந்த நபர் உதவி செய்வது போல் நடத்து, உங்களது ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை என்று கூறி, வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்து அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சிறுது நேரத்தில் அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.42 ஆயிரம் எடுத்துள்ளார்.
இதனையடுத்து பணத்தை இழந்த கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் பொதட்டூபெட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பதிவான வீடியோ காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் நகரி அருகே, கேவிஆர்பி பேட்டையைச் சேர்ந்த அருண் குமார் (32) என்பவரை நேற்று கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏற்கனவே காக்களூரைச் சேர்ந்த அமுதா என்பவரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.15,300 எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
உதவுவதுபோல் விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.42 ஆயிரம் நூதன மோசடி; வாலிபர் கைது
0